சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் இன்று(8) கொழும்பில் கூட்டப்பட்டது.
குறித்த கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகள் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி
இதில், முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள சுத்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடந்த 4ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால், அவசர அரசியல் குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிமல் சிறிபால டி சில்வா
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜேலால் டி சில்வா தவிர்ந்த ஏனைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களை கூட்டத்திற்கு அழைக்குமாறும் அதில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தக் கடிதத்திற்கு பதிலளித்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை உத்தரவு இதுவரை கிடைக்கப்பெறாததால் அதனை முன்னெடுப்பது சாத்தியமற்றது என தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |