நாட்டு மக்களுக்கு தகவல்களை வழங்கும் ஊடகவியலாளர்களை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணித்தது ஏன்!
இலங்கையில் அத்தியாவசிய சேவை வழங்குநர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்ற நிலையில், ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்படாமை தொடர்பில் சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
மக்களுக்கு தகவல்களை வழங்கும் ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அத்தியாவசிய சேவையில் சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் எரிவாயு வழங்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்தியவசிய சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் போதுஅவர்கள் வைத்தியசாலைக்கு சென்று மருந்து கொடுக்கின்றனர்.
அதேபோல் இந்த நாட்டு மக்களுக்கு தகவல்களை வழங்குபவர்கள் ஊடகவியலாளர்கள். ஆனால் அவர்களுக்கு எரிபொருள் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளதா என்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் நேற்று கேட்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி கடந்த வெள்ளிக்கிழமை தான் இது சுகாதாரத் துறையில் உள்ளவர்களுக்கும் மற்ற அத்தியாவசிய சேவைகளைக் கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்தார்.
வீதிகளில் வாகனங்கள் இல்லை. அந்த வாகனங்கள் அனைத்தும் வரிசையில் நிற்கின்றன, எரிபொருள் வாங்கலாம் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. சிலர் துண்டு சீட்டுகளை கொடுத்துள்ளனர்.
ஆனால் துண்டு சீட்டுகள் இப்போது பயனில்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஒரு பொய்யை மறைக்க இந்த அரசாங்கம் தினமும் 100 பொய்களை கூறுகின்றது. இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
