ஸ்ரீலங்கா மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் - ஜி.எல் பீரிஸ் சுட்டிக்காட்டு
ஸ்ரீலங்கா மீது ஒவ்வொரு வருடமும் ஜெனீவா கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால் உண்மையிலேயே மனித உரிமை மீறல் பற்றிய விவகாரமா அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிக்கின்றார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அடுத்த மாத கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவின் போர்க்குற்றம் மற்றும் பொறுப்புகூறல் பற்றிய விவகாரம் முதல் அமர்விலேயே எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் இந்த சந்தேகத்தை முன்வைத்தார்.
கடந்த சில வாரங்களாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவருகின்றன. செப்டம்பர் 12 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வு ஜெனீவா நகரில் கூடுகின்றது.
செப்டம்பர் 21ஆம் திகதி ஐ.நா பொதுச் சபை அமர்வு நியூயோர்க் நகரில் கூடுகின்றது. இவ்விரண்டு மாநாடுகளிலும் நாம் எமது நாட்டிற்கான அனைத்து பிரயோசனத்தையும் பெற எதிர்பார்க்கின்றோம்.
எமது நிலைப்பாடு பற்றி விலாவாரியாக நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். அந்த நாடுகளிலுள்ள இலங்கையின் தூதுவர்களான மொஹான் பீரிஸ் மற்றும் சி.ஏ சந்திரபிரேம ஆகியோர் மூலமாக இந்தத் தெளிவுபடுத்தலை செய்துள்ளோம்.
இதற்குப் பதிலாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதவர்களை தனித்தனியாக சந்தித்து ஜெனீவா கூட்டத்தொடருக்கு தொடர்புடைய விடயங்களையும், தெளிவுபடுத்தலையும் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் செய்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
