பொறுப்பற்று செயற்படும் இலங்கை அரசு - உலப்பனே சுமங்கல தேரர் கொதிப்பு
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஊழல் ஒழிப்பு தேசிய முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் நடுத்தர சாதாரண மக்களே இன்று சுகாதார ரீதியிலும், பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஊழல் ஒழிப்பு தேசிய முன்னணியின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைச் சுட்டிக்கா்டினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கொவிட் - தடுப்பூசி செலுத்தும் பணிகளில் போது வைத்தியர்கள் மற்றும் சுகாதார தரப்பினர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தற்காக மொரட்டுவை நகர மேயர் சமன்லால் பெர்னான்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளார்.
கொவிட் -19 தடுப்பூசி செலுத்தல் விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு காணப்டுகின்றமை இதுவொன்றும் முதலும், இறுதியும் அல்ல. அரசியல்வாதிகளின் கண்காணிப்புக்கு அமையவே கொவிட் தடுப்பூசி பெரும்பாலான பகுதிகளில் செலுத்தப்பட்டுள்ளன.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் அவர்களுக்கு பொறுப்பாகவுள்ள துறைகளில் உள்ளவர்களுக்கு தேவையான அளவு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
சுகதார தரப்பினருக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும், வயது முதிர்ந்தோருக்கும், பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி இதுவரையில் முழுமையாக வழங்கப்படவில்லை.
அனைத்து செயற்பாடுகளிலும் அரசியல் தலையீடு காணப்படுவதைப் போன்று கொவிட்- தடுப்பூசி விவகாரத்திலும் அரசியல் தலையீடு முழுமையாக காணப்படுகிறது.
கொவிட்- 19 வைரஸ் கட்டுப்பாட்டு சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் நடுத்தர சாதாரண பொது மக்களுக்கு மாத்திரமே செல்வாக்குச் செலுத்துகின்றன. செல்வந்தர்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்கள் தாக்கம் செலுத்தவில்லை என்றார்.