உலகளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்! குவியப்போகும் வெளிநாட்டவர்கள்
வெளிநாட்டவர்கள் ஓய்வு வாழ்க்கையை மேற்கொள்ள உலகின் மிகவும் செலவுக்குறைவான நாடாக இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஓய்வூதிய குறியீடு (Global Retirement Index) அறிக்கையை வெளியிட்ட International Living இதழின் ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு, சுகாதார வசதிகள், காலநிலை மற்றும் குடியிருப்பு வாய்ப்புகள் உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் 35ஆவது தடவையாக வெளியிடப்பட்ட இந்த குறியீட்டில், மொத்த தரவரிசையில் கீரீஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மலிவு விலை
எனினும், குறைந்த செலவில் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணியில் திகழ்கிறது.

இதன்படி, மலிவு விலையில் செலவு செலுத்தும் திறன் பிரிவில் 98 மதிப்பெண்கள் பெற்று இலங்கை உலகில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையில் உணவு மற்றும் காய்கறிகளின் குறைந்த விலை, எளிதான போக்குவரத்து சேவைகள், மேலும் கொழும்பில் கிடைக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதார சேவைகள் ஆகியவை இந்த உயர்ந்த தரவரிசைக்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஓய்வூதிய வீசா
அத்துடன், ஆசியாவில் ஓய்வூதிய வீசா பெற எளிதானதும் செலவுக்குறைவானதுமான நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
“13 யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்கள், அழகிய கடற்கரைகள், பல்வகை கலாசாரம் மற்றும் ஏற்ற விலைகள் ஆகியவற்றுடன், செலவை அதிகப்படுத்தாமல் உயர்தர வாழ்க்கை வாழக்கூடிய இடம் இலங்கை,” என International Living குறிப்பிட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இந்த இதழ், உலகம் முழுவதும் வாழும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களின் அனுபவங்களும் தரவுகளும் அடிப்படையாகக் கொண்டு இந்த குறியீட்டை தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |