எதிரானவர்கள் விலகலாம் -ஆளும் தரப்பு அதிரடி அறிவிப்பு
மாகாண சபை முறைக்கு எதிரானவர்கள் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பாதவர்கள் தாமரை மொட்டு கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்பு. அதற்கு தேவையான நாடாளுமன்ற, சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டும்.
வாக்குரிமையை பறிக்கவும் பிற்போடவும் இடமளிக்க முடியாது. அதனால் எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பும் கட்சிகள் கூட்டணியில் போட்டியிடலாம்.
மாகாண சபையை விரும்பாதவர்கள் போட்டியிட மறுப்போர் அவர்களது தீர்மானத்தை எடுக்கலாம். அது ஜனநாயக உரிமை. பலாத்காரமாக யாரையும் அழைத்துக் கொண்டு தேர்தலுக்குச் செல்ல நாம் விரும்பவில்லை.
எம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட பலர் உள்ளனர்.
வெற்றியும் சந்தேகம் இல்லை" என்று நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிறு கட்சிகள் சிலரே விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.