பொதுமக்களுக்கு விஷேட அறிவித்தல் : இலங்கை காவல்துறை
காவல்துறை அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
பொதுமக்களின் உடைமைகள், வாகனங்கள், வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றைச் சோதனை செய்வது அவசியம் எனக்கூறி சிவில் உடையில் காவல் அதிகாரிகள் போல் நடித்து சொத்துக்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பல பிரதேசங்களில் பதிவாகி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், குற்றப் புலனாய்வு திணைக்களம் அல்லது சிறிலங்கா காவல்துறையின் விசேட அதிகாரிகள் தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காவல்துறை அதிகாரிகளும் சிவில் உடையில் இவ்வாறான சோதனைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான சோதனை
சிறப்புப் பிரிவுகளின் அதிகாரிகளால் ஏதேனும் சோதனை நடத்தப்பட்டால், அவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை வழங்குவார்கள் என்றும் காவல்துறை தனது அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சந்தேகத்திற்கிடமான நிலையில் யாரேனும் சோதனைகளில் ஈடுபட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் கூறியுள்ளனர்.