திறைசேரியின் செயலாளர் சற்றுமுன்னர் நாடாளுமன்றுக்கு வருகை
புதிய இணைப்பு
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காக, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான ஹர்ஷண சூரியப்பெரும சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் நிதியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்து விளக்கமளிப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதியின் விசேட உரைக்கு பின்னரே அவர் சமூகமளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காக, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும நிதிக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
இன்று (30) மதியம் 1.00 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் (COPF) அவர் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவொன்று, உரிய தரப்புக்குச் செல்லாமல் சந்தேகத்திற்கிடமான முறையில் வேறொரு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காக நிதி அமைச்சின் செயலாளர் அழைக்கப்பட்டுள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் விடுத்த இந்த அழைப்பை ஏற்று, இன்று (30) குழுவின் முன் சமூகமளிக்க முடியாது எனத் திறைசேரி செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும இதற்கு முன்னர் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

எனினும், இந்த விவகாரத்தின் தீவிரம் காரணமாக அவர் இன்று மதியம் 1.00 மணிக்குக் குழுவின் முன் முன்னிலையாகவுள்ளார்.
நாட்டின் நிதி மேலாண்மையிலும், சைபர் பாதுகாப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பில் இன்றைய அமர்வில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |