தனித்து விடப்பட்டார் கோட்டாபய! திக்குமுக்காடும் ராஜபக்ச அணி
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனித்து செயல்பட வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வெற்றி என்பது அவர்களின் சகோதர ஒற்றுமையில் பின்னிப் பிணைந்ததாக இருந்தது. எனினும் அண்மைய நாட்களில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் அவர்களின் ஆட்சி அதிகாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது.
சிறிலங்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அவர்களின் அரசியல் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர்கள் சகோதரர்களுக்கு இடையிலும் தமது குடும்பத்திற்குள்ளும் முக்கிய பதவிகளை பகிர்ந்துகொண்டனர். ஒருவருக்கு சிக்கல்வரும் பொழுது அத்தனை பேரும் ஒன்றிணைந்து அதனை வெற்றி கொள்ளும் மார்க்கத்தை கண்டுபிடிப்பர்.
எனினும், பொருளாதார சரிவால் நாடு அதளபாதாளத்திற்குள் சென்றதன் பின்னர், அதனை சமாளிப்பதற்குப் பதிலாக ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
இச்சரிவிற்கு யார் காரணம் என்ற பெரும் சர்ச்சைக்குள் அவர்களே முட்டி மோதியதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகிருந்தன. அதுமாத்திரமன்றி, பதவிகளை விட்டுக்கொடுக்காமலும் தங்களின் வீழ்ச்சியை அவர்களே உருவாக்கினர் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அண்ணன் மகிந்தவின் வழிகாட்டுதலிலும், தம்பி பசிலின் திட்டங்களிலும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை முன்னெடுத்திருந்தார். ஆனால், பிணக்குகள் உச்சம் தொட, நாட்டில் பொது மக்கள் கிளர்ந்தெழுந்ததன் பின்னர், மகிந்த ராஜபக்ச பதவியை துறந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது பசில் ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்திருக்கிறார்.
அண்ணன் தம்பி, என்று அதிகாரங்களை தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்ட சகோதரர்கள் யாரும் தற்போது உடனில்லை. கோட்டாபய ராஜபக்ச மட்டும் அரச தலைவராக பதவியில் நீடிக்கிறார்.
அண்ணன் மகிந்தவும் இல்லாமல், தம்பி பசிலும் இல்லாமல் அவர் தனது எஞ்சிய ஆட்சிக்காலத்தை எப்படி சமாளித்துக் கொள்ளப் போகிறார் என்கிற கேள்வியை தென்னிலங்கை அரசியல் அவதானிகள் எழுப்பியிருக்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்க என்னும் அரசியல் தந்திரியுடன் கோட்டாபய இணங்கி எஞ்சிய காலத்தை சீராக்குவாரா அல்லது ரணிலுடன் மைத்திரி மோதுண்டு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது போல, கோட்டாபயவும் மைத்திரி வழியில் பயணிப்பாரா அல்லது தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலை தீர்க்க முனைப்புக்காட்டுவாரா என்பதை வரும் நாட்கள் உறுதிப்படுத்தும்.