ஜீ.எல். பீரிஸின் அறிவிப்பு - மீண்டும் தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள கொதிநிலை!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியா செல்லவுள்ளார்.
இம்மாத இறுதி வரை அங்கு தங்கியிருந்து அதன் பின்னர் நாட்டிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
சிங்கப்பூர் அரசாங்கம் காலக்கெடு

அதனையடுத்து கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மீண்டும் நாடு திரும்புவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க பிரஜாவுரிமையைப்பெற்றிருந்த நிலையிலும் கோட்டாபயவுக்கு எதிராக அங்கும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதால் தற்போது அவர் அங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கோட்டாபயவின் மகனின் வீட்டிற்கு முன்னால் பெரும்பாலன மக்கள் ஒன்று கூடி போராட்டம் மேற்கொண்டிருந்தமையால், அவர் தனது மகனின் பாதுகாப்பு கருதி அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
உறுதிப்படுத்திய ஜீ.எல். பீரிஸ்

இதன் காரணமாகவே அவர் மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது அதிகபட்ச ஆற்றலுடன் முன்னர் சேவையாற்றியதைப் போன்று, தான் பிறந்த தாய்நாட்டிற்கு தனது சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில், தற்போது சிங்கப்பூர் அரசாங்கமும் தங்கள் நாட்டை விட்டு கோட்டாபய வெளியேறுவதற்கான காலக்கெடுவாக 15 நாட்களை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.