நாட்டு மக்களிடமிருந்த உண்மைகளை மறைத்த கோட்டாபய அரசாங்கம் - சர்வதேச ஊடகத்தில் ரணில் பகிரங்கம்!
சிறிலங்காவின் நிதி நெருக்கடி குறித்த உண்மைகளை கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கூறவில்லை என பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் இலங்கை திவாலானதாகவும், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் எனவும் கடந்த அரசாங்கம் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமான CNN செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே ரணில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன் போது, ஏன் சிறிலங்காவின் அதிபராக ஆசைப்படுகிறீர்கள் என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரணில், நாட்டிற்கு இவ்வாறு பின்னடைவு ஏற்படுவதற்கோ மற்றவர்கள் கஷ்டப்படுவதற்கோ நான் விரும்பவில்லை. அதனாலேயே எனப் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் எனத் தெரிவித்துள்ளார்.
மீள்ச்சிக்கு பல வருடங்கள் தேவையில்லை

அதற்கு ஐந்து அல்லது பத்து வருடங்கள் தேவையில்லை எனவும், அடுத்தாண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் ஸ்திரமடைய ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதில் இருந்து மீள்வதற்கு எங்களுக்கு 5 அல்லது 10 ஆண்டுகள் தேவையில்லை. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாம் ஸ்திரமடைய தொடங்குவோம்.
செயல்படும் பொருளாதாரத்தை உருவாக்குவது நிச்சயம்

2024 ஆம் ஆண்டளவில் நாம் செயல்படும் பொருளாதாரத்தை உருவாக்குவோம், அது நிச்சயமாக வளர்ச்சியடையத் தொடங்கும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறிலங்காவில் இருந்து மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்சவிடம் பேசியதாகவும், அவர் சிங்கப்பூர் சென்றதாகவும், ஆனால் இன்னும் சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு எங்காவது இருக்கிறாரா என்பது அவருக்குத் தெரியாது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.