இனவாதத்திற்கு முன்னால் மௌனம் காக்கும் சட்டம்...! சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்கும் PTA
ராப் பாடகரான சங்கீர்ஷன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்ட விவகாரம், இலங்கையின் சட்ட நடைமுறை குறித்த பலத்த விவாதங்களை மீண்டும் தோற்றுவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பைக் குறித்து அவர் பாடினார் என்ற ஒற்றைக் காரணத்தை முன்வைத்து, பயங்கரவாதத் தடைச்சட்டம் ஓர் இளம் கலைஞன் மீது ஏவிவிடப்பட்டது.
ஆனால் இதே காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் அரங்கேறிய மாற்று நிகழ்வுகள் எவையும் அரசாங்கத்தினதோ அல்லது காவல்துறையினதோ கண்களுக்குப் புலப்படவில்லை என்பதுதான் இங்குள்ள முரண்பாடாகும்.
கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று தமிழ் இளைஞர், யுவதிகள் தங்களது இழந்த உறவுகளுக்காகக் கண்ணீரோடு நினைவேந்தல்களை முன்னெடுத்து அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
துரதிர்ஷ்டவசமாக பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சில தீவிரப்போக்குடைய இளைஞர், யுவதிகள், தமிழர்களின் அந்தத் துயரத்தை எள்ளி நகையாடும் விதமாகப் பல பதிவுகளை இட்டிருந்தனர்.
அவ்வாறு இகழ்ந்ததோடு மட்டுமன்றி, அதே விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படங்களையும் அமைப்பின் சின்னங்களையும் (இலச்சினைகளையும்) பகிரங்கமாகப் பகிர்ந்து தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கில் பதிவுகளைப் பரப்பியிருந்தனர்.
இங்குதான் சட்டத்தின் நடுநிலைமை குறித்த தார்மீகக் கேள்வி எழுகிறது. தமிழ் இளைஞர் ஒருவர் தனது கலை வெளிப்பாட்டிற்காக இனவாதம், பயங்கரவாதம் எனக் கூறி உடனடியாகக் கைது செய்யப்படுகிறார்.
ஆனால் அதே தடைசெய்யப்பட்ட அமைப்பின் அடையாளங்களை வைத்துக்கொண்டு ஒரு தேசிய இனத்தின் மரண ஓலத்தை ஏளனம் செய்து, திட்டமிட்ட முறையில் இனவாதத்தைத் தூண்டும் பெரும்பான்மை இனத்தவர்கள் மீது எந்தச் சட்டமும் பாயவில்லை.
கலை சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் ஒடுக்கும் வகையில் சிறுபான்மையினர் மீது பாயும் சட்டம், பெரும்பான்மையினரின் அப்பட்டமான இனவாதப் போக்குகளுக்கு முன்னால் மௌனம் காப்பது ஏன் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா வழங்கிய மேலதிக கருத்துகளுடன் வருகின்றது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |