அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுத்த அநுர
இலங்கையின் மத்தள விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்கள் தரையிறங்குவதற்கு அமெரிக்காவும், நல்லெண்ண வருகைக்காக இலங்கைக்கு வர ஈரான் கப்பல் ஒன்றும் அனுமதி கோரியிருந்ததாகவும் அரசாங்கம் இரண்டிற்கும் அனுமதி வழங்கவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (20) விசேட உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒத்துழைப்பை மேம்படுத்தும் விஜயமாக இலங்கைக்கு வர விரும்புவதாகவும் பெப்ரவரி 26 ஆம் திகதி ஈரான் எம்மிடம் ஒரு கோரிக்கையை விடுத்தது.
ஐக்கிய அமெரிக்கா விடுத்த கோரிக்கை
மார்ச் மாதத்தின் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் அந்த அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதே நாள் மாலை ஐக்கிய அமெரிக்கா ஒரு கோரிக்கையை முன்வைத்தது.
தமது நாட்டிற்கு அருகில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரினார்கள்.

எமது மேசை மீது இரண்டு ஆவணங்கள் இருந்தன. ஒன்று ஈரான் விடுத்த கோரிக்கை, மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் தமது கடற்படைக் கப்பல்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. மறுபுறம் ஐக்கிய அமெரிக்கா விடுத்த கோரிக்கை, தமது கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் எமது மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தது.
இந்தநிலையில் நாம் மிகத் தெளிவான ஒரு முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் குறித்த சமிக்ஞைகள் ஏற்கனவே தோன்றியிருந்தன. நாம் அந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதுதான் நடுநிலைமை.
கொழும்புத் துறைமுகம்
நான் இங்கே கேட்கிறேன், ஏன் ஈரானிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கவில்லை என வினவப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்?

எமது ஒட்டுமொத்த நடுநிலைமையும் நழுவிப்போயிருக்கும். நாம் ஒரு தரப்பிற்குச் சார்பாகச் செயற்பட்டிருப்போம். இல்லையெனில் நாம் மற்றைய தரப்பிற்கும் இடமளிக்க வேண்டியிருந்திருக்கும்.
அவ்வாறு நடந்திருந்தால், எங்கோ தொலைதூரப் பிராந்தியத்தில் உள்ள அந்தப் போர் மோதலானது மத்தள விமான நிலையத்திற்கும் கொழும்புத் துறைமுகத்திற்கும் அருகில் வந்திருக்கும். நாம் அதனைச் செய்யவில்லை. அத்தகைய அழுத்தங்கள் மத்தியிலும் அந்த நடுநிலைமை கொள்கையை பாதுகாத்துள்ளோம்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |