தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் வைத்திய சங்கம் எடுத்துள்ள தீர்மானம்!
நாடளாவிய ரீதியில் இன்று (15) காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை, நாளை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (16) காலை 8 மணிக்கு தற்காலிகமாக கைவிடப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி விதிப்புக்கு எதிராக, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்கள், கடந்த 9 ஆம் திகதிமுதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தொழிற்சங்க நடவடிக்கை
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இந்த தொழிற்சங்கம் நடவடிக்கையில் இணைந்திருந்தது. அதற்படி, குறித்த சங்கத்தினால் அன்றைய தினம் 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும் திங்கட்கிழமை அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், தமது கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு வழங்கப்படாததால் நேற்றைய தினம் எஞ்சிய 5 மாகாணங்களிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
எனினும், தொடர்ந்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழுவின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
போராட்டம் தொடரும்
இந்தநிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையொன்று இன்று அதிபருக்கு அனுப்பப்பட்டது.
அந்த பிரேரணைக்கு அதிபர் செயலகம் அனுப்பியிருந்த பதில் கடிதத்தில் உள்ளடங்கியிருந்த சமிக்ஞைகள் குறித்து கவனம் செலுத்திய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு, தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை நாளை காலை 8 மணியுடன் தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் வரி விதிப்புக்கு எதிரான தமது சங்கத்தின் போராட்டம் தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.