யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கம்!
இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (13.10.2025) காலை வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காகவும் அரசாங்கத்தினுடைய ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நன்மைகளுக்காகவும் செயற்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள்
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை எனவும் குறித்த இடமாற்றங்களில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தால் கொண்டுவரப்படும் மேல் முறையீடுகள் பரிசீலிக்க தயார் என்ற நிலையில், உடன்பட்டு வெளியே பணிப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையிலும், விசேட மேல்முறையீட்டு சபை ஒன்று உருவாக்கப்பட்டு நான்கு தொழிற்சங்கங்களில் ஆசிரியர்களில் 41 பேருக்கு இடமாற்றங்களில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இடமாற்ற சபைக்கு தலைமை தாங்கிய அப்போதைய மாகாண கல்வி பணிப்பாளர், போலியான, பழிவாங்கல் வேண்டுமென்ற அரசியல் இலாபத்துக்காக செயற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வட மாகாண கல்வி திணைக்களத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் தாம் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







