சர்வதேச அழுத்தத்தை சமாளிக்க சிறிலங்கா புதிய நகர்வு
ஐ.நா மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வு நடைபெறவுள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் பல இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் சிறிலங்காவில் மிகக் கொடூரமான சட்டமாக கருதப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் சர்வதேச நியமனங்களுக்கு அமைவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களின் அடிப்படையில் தடுப்புக் காவல் உத்தரவிற்கு அமைய ஒருவரை தடுத்து வைக்கும் காலம் 18 மாதங்களிலிருந்து12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் நிலை குறித்து ஆராய்வதற்கு நீதவானுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. இதன் ஊடாக சந்தேக நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாவதை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
சந்தேக நபரை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தி, அவர் சித்திர வதைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபபட்டுள்ளன.
நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் பயங்கரவாத தடைச் சட்டத்தில், 43 ஆண்டுகளுக்கு பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
