பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரதியீடு செய்ய சிறிலங்கா அவசர முயற்சி
சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் உத்தேச புதிய ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்’ வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக விரைவாக சமர்ப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான சட்டமூலத்தை விரைவில் தயாரித்து முடிக்குமாறு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உத்தேச புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம்
உத்தேச புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் இன்று நீதியமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு புதுப்பிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மிகவும் தளர்வான விதிகளுடன் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக குடிமக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய சட்டம் அமையும் எனவும் நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை தயாரிப்பதற்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரில் புள்ளே மற்றும் அதிபர் சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
