இறுதிக்கட்டத்தில் இலங்கை பொருளாதாரம் - மக்களே காரணம் என்கிறார் முன்னாள் அமைச்சர்
நாட்டின் பொருளாதாரம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதால் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர்களுடனான சந்திப்பு கண்டியில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க( Sagala Ratnayaka)இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் பொருளாதாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு இல்லாது போயுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முயன்றுவருகின்றார்கள்.
இங்கு தொழில் செய்யவோ அல்லது வியாபாரத்தை நடத்தவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மிகவிரைவில் வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு இளைஞர்கள் முடிவு எடுத்துள்ளார்கள்.
எமது நாட்டில் எல்லாவித வளங்களும் உள்ளன. கடற்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து என நாட்டின் வளங்கள் ஏராளம். இருந்தும் அதனை உரிய வகையில் பயன்படுத்த இளைஞர்களுக்கு இன்று சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது.
எமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரத்தை அளித்தால், அவர் இந்த நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்வார். ஆனாலும் மக்கள் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என கவலை கொள்கிறோம்'' என்றார்.