தொடர்ந்தும் வலுவடையும் ரூபாவின் பெறுமதி
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பொருளாதார தீர்மானங்கள் காரணமாக ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வலுவடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தப் பொருளாதார தீர்மானங்கள் காரணமாக நாட்டின் அரசியல் நிலைமையும் நிலைத்தன்மையை அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு
நிதி அமைச்சின் அறிக்கையின் படி கடந்த செப்டம்பர் மாதம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் வெளிநாட்டு கையிருப்பாக ஈட்டியுள்ள நிலையில், தற்போது அது 23.5 வீதத்தால் அதிகரித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த பெப்ரவரி மாதத்தில் அரசாங்கம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக பெற்றுக் கொண்டுள்ளமையினால் வெளிநாட்டு கையிருப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
அத்துடன், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் 29 ஆயிரமாக பதிவாகியிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது ஒரு லட்சத்தை தாண்டியிருப்பதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களால் இந்த அபிவிருத்திகள் அனைத்தும் சாத்தியமாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


