மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தகவல்படி, இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்த 6,766 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து, மே 2026-ல் 1.6% அதிகரித்து 6,873 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
சீன மக்கள் வங்கியின் பரிமாற்ற ஏற்பாட்டிலிருந்து கிடைக்கும் வருமானமும் இதில் அடங்கும் என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 2026 இல் அமெரிக்க டொலர் 6.759 பில்லியனாகக் குறைந்திருந்த கையிருப்பு, மே மாதத்தில் மீண்டும் உயர்வடைந்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பண அனுப்புதல்கள் (Remittances), சுற்றுலாத்துறையின் நிலையான வருவாய் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் மூலோபாய வெளிநாட்டு நாணய கொள்வனவுகள் ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
கையிருப்பு நிலை
மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு: அமெரிக்க டொலர் 6.8 பில்லியன்.
ஏப்ரல் மாதத்தில் பதிவான சரிவிலிருந்து மீட்சி.
தற்போதைய வெளிநாட்டு நாணய கையிருப்பு சுமார் 2.7 மாதங்களுக்கான இறக்குமதி தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு
இலங்கையின் பொருளாதார நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது விரிவாக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility - EFF) திட்டத்தின் 5 மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
695 மில்லியன் நிதி
இதன் மூலம் இலங்கைக்கு சுமார் அமெரிக்க டொலர் 695 மில்லியன் நிதியைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் பண அனுப்புதல்கள் தொடர்ந்து வருடாந்திர அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளதால், நாட்டின் வெளிநாட்டு நாணய வருவாய் அதிகரித்துள்ளது.
மேலும், சுற்றுலாத்துறையின் நிலையான வருமானம், வர்த்தக பற்றாக்குறையால் ஏற்படும் அழுத்தங்களை சமநிலைப்படுத்தும் வகையில் நாட்டிற்கு தொடர்ச்சியான வெளிநாட்டு நாணய வருவாயை வழங்கி வருகிறது.
பொருளாதார மீட்சிப் பாதையில் பயணிக்கும் இலங்கைக்கு, வெளிநாட்டு நாணய கையிருப்பின் இந்த உயர்வு ஒரு நேர்மறையான முன்னேற்றமாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |