அதிகார மையம் ஒழிக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் தமிழ் எம்.பி!
உழைப்பவனுக்கு கஞ்சி உறிஞ்சுகின்றவனுக்கு கனதியான படையல் என்ற அநியாயம் உள்ள வரை இந்த நாட்டில் அபிவிருத்தியை எட்ட முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்ககைத்தரம் தொடர்பில் அவர் இன்று (12.10.2025) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தேயிலைக்கு உலகளவில் தங்க விருது கிடைத்துள்ளது எனினும் உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது கொடுக்கப் போகின்றோம் எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மலையகத் தொழிலாளர்களின் நிலைமை
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில், “உலகளவில் இலங்கையின் கறுப்புத் தேயிலைக்குத் தங்கவிருது கிடைத்திருப்பதாகவும், கின்னஸ் புத்தகத்தில் அந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் சமந்த வித்தியாரத்ன பெருமையாக கூறியுள்ளார். இது பாராட்டத்தக்க விடயமாகும்.
ஏறத்தாழ ஒரு கிலோ தேயிலையின் விலை இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் வரை காணப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
இந்த வேளையில், அதற்காக உழைத்த மலையகத் தொழிலாளர்களின் நிலைமை பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. 200 ஆண்டுகளாக இந்நாட்டின் பொருளாதாரத்துக்காக அர்ப்பணித்த மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்ககைத்தரம் மோசமாகவே உள்ளது.
வங்குரோத்து நிலை
நாட்டுக்குப் பெருமை தேடிக்கொடுத்த மலையகத் தொழிலாளர்களின் வாழ்விடம், வாழ்க்கைத்தரம், சம்பளம், அவர்களுக்கான கணிப்பு, உரிமை என்பன இன்றும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன.
அவர்களால் ஏற்படுத்தப்படும் பொருளாதார அனுகூலங்களை அனுபவிக்கின்றோம், மதிக்கின்றோம். அதனை ஈட்டித் தந்த தொழிலாளர்களை அதிகார மையமும், அவர்களது பரிவாரங்கமும் மிதிக்கின்றன.
இப்படியான சாபக்கேட்டினால் நாட்டின் பொருளாதாரம் 2023 இல் வங்குரோத்தானது. அதிலிருந்து இன்னும் நாடும், மக்களும் மீளவில்லை.
இதனை தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாவது உணர்ந்து செயலாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
