பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா- மத்திய வங்கி ஆளுநர் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்!
ஸ்ரீலங்கா மிகப்பெரிய அந்நிய செலாவணி இருப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்ற நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பேராசிரியர் லக்ஷ்மன் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 16ஆம் திகதி ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றின் நெருக்கடி ஓரளவுக்கு தீர்ந்துவருகின்ற நிலையில் மறுபக்கம் ஸ்ரீலங்கா மிகப்பெரிய அந்நிய செலாவணி இருப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இதனிடையே இறக்குமதி செய்யப்படுகின்ற ஆடம்பரப் பொருட்களுக்கான இருப்பினையும் இலங்கை மத்திய வங்கி டொலர் நெருக்கடி காரணமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் அடுத்தவாரம் மாற்றம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மத்திய வங்கியின் தற்போதைய வங்கி ஆளுநர் பதவியிலுள்ள டபிள்யூ. டி லக்ஷ்மன் அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளதை இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தில் அவருக்கு உயரிய பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக அரச மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நிதி இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். மேலும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று அஜித் நிவாட் கப்ராலுக்காகத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதாயின் கப்ரால் சில நிபந்தனைகளை விதித்திருந்தார்.
அதன்படி மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பொறுப்பேற்றால், அமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரங்கள், சிறப்புரிமைகளையும் அவர் கேட்டிருந்தார்.
இவற்றை வழங்குவதற்காகவே தற்போது விசேட வர்த்தமானி அறிவிப்பு தயாரிக்கப்படுவதாக அறியமுடிகிறது.