ஸ்ரீலங்கா அரசியலில் வெறுப்பு; நாட்டை விட்டு வெளியேறிய சந்திரிகா- உண்மையை வெளிப்படுத்திய பிரதானி!
ஸ்ரீலங்கா அரசியலில் ஏற்பட்ட வெறுப்பு நிலை காரணமாக ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இந்தத் தகவல்களை சந்திரிகா குமாரதுங்கவின் ஊடகப்பிரிவிடம் ஐ.பி.சி தமிழ் செய்தி பிரிவினர் வினவிய போது மறுப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நீண்டகால இடைவெளியின் பின்னர், 2015ஆம் ஆண்டில் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கியிருந்தார். மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த பெரிதும் தலைமை தாங்கி முன்நின்று உழைத்திருந்தார்.
அதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து அரசியலில் இருந்து மீண்டும் ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில், தற்போது ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுவருகின்ற பொருளாதார நெருக்கடி, அரசியல் விவகாரம் காரணமாக பெரிதும் வெறுப்பு நிலையை அடைந்துள்ள சந்திரிகா குமாரதுங்க, பிரித்தானியாவுக்கு சென்றுவிட்டார் என்ற தகவல்கள் தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கொழும்பிலிருந்து வெளியாகும் பல்வேறு ஊடகங்களும் இந்த செய்தியை வெளிட்டுள்ளன. அத்துடன் பிரித்தானியாவிலுள்ள நகரமொன்றில் அவர் வீதியில் நடந்துசென்றபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற புகைப்படம் ஒன்றும் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த சந்திரிகா குமாரதுங்க, வெறுப்பு நிலையை அடைந்திருப்பதாகவும், அதனால் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் தகவல்கள் கூறப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் குறித்து ஐ.பி.சி தமிழ் செய்திப்பிரிவின் கொழும்பு செய்தியாளர் ஸ்ரீயான் சுஜித், ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவி சந்திரிகா குமாரதுங்கவின் நெருக்கமான மற்றும் ஊடகப் பிரதானியிடம் தொலைபேசி ஊடாக வினவினார்.
இதற்குப் பதிலளித்த அவர், சந்திரிகா குமாரதுங்க ஸ்ரீலங்கா அரசியலை விட்டு வெளியேறியிருப்பது உண்மை என்றாலும், ஸ்ரீலங்கா மீது ஏற்பட்ட வெறுப்பினால் நாட்டை விட்டு வெளியேறியிருப்பது போலியான பிரசாரம் என்று கூறினார்.
ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவி சந்திரிகாவின் மகன் மற்றும் மகள் ஆகியோர் பிரித்தானியாவில் வசித்து வருவதால் அவர்களை சந்திப்பதற்காகவே பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.