ஸ்ரீலங்கா-சீனாவிற்கிடையில் நல்லுறவை மேம்படுத்திய 'கல்யாண மித்ரா'- தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம், மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள உலகத் தரம் வாய்ந்த துறைமுக உட்கட்டமைப்புகள் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்டுப் பாதை பொருளாதார மாநாட்டில் காணொளி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்புசி மட்டுமே நிலையான தீர்வாகும் என தெரிவித்தார். எனினும் துரதிர்ஷ்டவசமாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகளில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா தடுப்பூசி வழங்கலை 'உலகளாவிய பொது சுகாதார நலன்களின் அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் 'கல்யாண மித்ரா' கொள்கைகளின் அடிப்படையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த நட்பு நிலவி வருவதுடன் சீன அரசாங்கம் இலங்கையிலும் உலகெங்கிலும் கொரோனா தொற்றுநோயை ஒழிக்கும் பணியில் நல்கி வரும் பணிகளை பாராட்டுவதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரமும் கொரோனா தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுப்படுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் தர பிராந்திய நிதிச் சேவை நிலையமாக கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள உலகத் தரம் வாய்ந்த துறைமுக உட்கட்டமைப்பு அமையவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.