தமிழக மீனவர்களுக்கெதிராக ஸ்ரீலங்கா கடற்படை மீண்டும் அட்டூழியம்- பதற்றத்தில் மீனவர்கள்; உண்மையை விளக்கிய கப்டன்!
தமிழக மீனவர்களின் வலையை அறுத்து ஸ்ரீலங்கா கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்ததாக வெளியான அனைத்து செய்திகளையும் ஸ்ரீலங்கா கடற்படை முற்றாக நிராகரித்துள்ளது.
அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா ஐ.பி.சி. தமிழ் செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழகம் - இராமேஷ்வரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்றபோது தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே ஸ்ரீலங்கா கடற்படையினர் இடைமறித்து இடையூறு செய்ததாக தமிழக ஊடகங்களில் இன்றைய தினம் செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை விரட்டியடித்ததாகவும், ஸ்ரீலங்கா கடற்படையின் அநீதியான செயலால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 க்கும் அதிகமான ரோந்து கப்பல்களில் வந்த ஸ்ரீலங்கா கடற்படையினர் தங்களுடைய நாட்டுக்கு சொந்தமான பகுதிகளில் எப்படி மீன்பிடிக்கலாம் என்று ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்து, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துளளனர் என்றும், சில மீனவர்களின் வலைகளை அறுத்து வீசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவின் கொழும்பு செய்தியாளர் ஸ்ரீயான் சுஜித், ஸ்ரீலங்கா கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கப்டன் இந்திக்க டி சில்வாவிடம் வினவிய போது, அவ்வாறான எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை என்று அவர் பதிலளித்தார்.
நடுக்கடலில் சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்களே இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், அதனூடாக தங்களது குற்றங்களை மூடிமறைக்க முயற்சி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாறாக சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கின்ற எந்தவொரு வெளிநாட்டு மீனவரையும் கைது செய்யும் அதிகாரம் ஸ்ரீலங்கா கடற்படைக்கு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா கடற்படைப் பேச்சாளர் ஐ.பி.சிக்கு தெரிவித்துள்ளார்.