பேய் போகப் பிசாசு வந்த கதை
என்னதான் உலகம் முழுவதுமாக ஓடி ஓடி இலங்கையின் அரச தலைவர் தனக்கு என்று ஒரு நல்ல முகத்தை உருவாக்க ஓடுத்திரிந்தாலும் உள்நாட்டில் என்னவோ “பழைய குறுடி கதவை திறடி “ என்ற கதைதான்.
ஏதோ தான் தான் இலங்கையை மீட்க வந்த மீட்பர் உலக அரங்கில் இலங்கை நல்லிணக்கத்திற்கு பெயர்போன நாடு இப்படி ஆயிரம் கதைகளை உலவ விட்டாலும் இன்னமும் இலங்கைக்குள் இருக்கின்ற பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.
சொல்லப்போனால் தமிழர் தாயகத்தில் காணாமல் போனோரில் தொடங்கி அரசியல் கைதிகள் வரையும் மலை மலையாக அளந்து நிலம் பிடிக்கும் புத்தர் என நீளும் இந்த நிலைகள் ஓய்ந்தபாடில்லை.
அரச தொல்லியல் துறைக்கு தமிழர்களின் நிலம் பிடிப்பதும் அரச இராணுவத்திற்கு பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்துவதுமே பிரதான பணியாக கூட இருக்குறது.
இன்னொருபக்கம் தென்னிலங்கையில் தொடர் கொலைகளும் விபத்துக்களும் ஏதோ திட்டமிட்டு நடத்தப்படுவது போலவே நடந்துகொண்டிருக்கிறது.
நிம்மதியே இல்லாமல் இலங்கை மக்கள் ஏகத்திற்கு தவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இப்படியிருக்க விபத்தொன்றில் கடந்த வாரம் அமைச்சரொருவர் மரணமடைய இன்னுமொரு அமைச்சரை கதிரையேற்றி அழகு பார்க்கிறார் அரச தலைவர் ரணில்
சரி அவர் யாரை அமைச்சராக்கினால் நமக்கென்ன என்றுதானே யோசிக்குறீர்கள் இருக்கட்டும்.
கொலையென்று சந்தேக்கப்படும் ஒருவரின் மரணத்தின் பின் புதிதாக வந்தவர் யார் தெரியுமா அவர் ஒரு துப்பாக்கி அமைச்சர்
இவருரின் துப்பாக்கி சண்டித்தனம் பற்ற ஒரு கதை இருக்குறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி புதிய ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே உலங்குவானூர்தியில் ஏறி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று மது போதையில் அத்துமீறி நுழைகிறார் அங்கு அரசின் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதிகளை தன் முன் முட்டுக்காலில் இருக்கச்சொல்லி அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவேன் என்று பெரும்பாடு பட்டிருக்கிறார்.
இந்த விடயம் எப்படியோ கசிந்து அன்றைய அரசியல் அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகள் காரசாரமான விவாதங்கள் எல்லாம் நடந்து முடிய காரணமாகிறார்.
பின்னர் எப்படியோ நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன அவர்களது தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு அடிப்படை மனித ஒழுக்கம் கூட இல்லாத மிகமோசமான ஜந்து இது என்றமாதிரி அவரின் மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
சிறைச்சாலைக்குள் ஆயுதம் பயன்படுத்தியமை தொடங்கி அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துதல் வரை இடையில் இன்னும் பல குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக அவர் வழங்கியிருந்தார் .
ஆனால் இலங்கையை பொறுத்தவரை குற்றவாளிகள் சொகுசு வாகனங்களில் பயணித்து சொகுசு வீடுகளில் வசிப்பதும் அப்பாவிகள் சிறையில் அடைக்கப்படுவதுமான கலாசாரம் இவர் விடயத்திலும் பொய்த்துவிடவில்லை.
நடத்தை அடிப்படையில் பூச்சியப்பண்புகளைக்கொண்ட குற்றவாளி சிறைக்கு அனுப்பப்படுவதற்கு பதிலாக 2048 இல் இலங்கையை வல்லரசாக்கும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஊர் உலகத்திற்கு தன்னை நீதவனாக காட்டுக்கொள்ளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்த நாட்டில் அப்படி நடக்கமுடியவில்லை என்பதுதான் வேதனை.
என்ன செய்வது பேய்கள் அரசாண்டால் சாத்திரங்கள் பிணம் தின்பது இயல்புதானே