ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள் உட்பட பலர் கைது
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகே இன்றைய தினம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 31 பேர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை காணொளியாக பதிவுசெய்த ஊடகவியலாளர்களின் கமாராக்கள் மீதும் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகில், பத்தரமுல்லை, பொல்துவ சுற்றுவட்டம் அருகே தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பௌத்த பிக்குகள் இருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெலிகட மற்றும் தலங்கம காவல்துறையினர் கூட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் கீழான ஒழுங்குவிதிகள் இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், விரிவுரையாளர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ரீலங்கவிலுள்ள பிற குழுக்கள் இந்த சட்டமூலத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் உயர்கல்வியை தனியார்மயமாக்க வழிவகுக்கும் என்று அவர்கள் அஞ்சும் உத்தேச கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தினிடையே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தற்போதைய எரிபொருள் விலையேற்றம் மற்றும் பலவிதமான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய 31 பேர்வரை ஸ்ரீலங்கா காவல்துறையினரால் கொத்து கொத்தாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை காணொளி வகையில் பதிவுசெய்த சில ஊடகவியலாளர்களின் கமராக்கள் மீது ஸ்ரீலங்கா காவல்துறையின் பெண் அதிகாரிகள் சிலர் தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து அங்கு பிரசன்னமாகியிருந்த காவல்துறை உயரதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் முறையிட்டபோதும் அவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றமையும் காணக்கூடியதாக இருந்தது.