பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தகம் தொடர்பில் கோட்டாபயவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றினை மேற்கொண்டு ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துமாறு ஸ்ரீலங்கா வர்த்தக சபை அரசாங்கத்தை கோரியுள்ளது.
தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்தத் தயாராக உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை வர்த்தகச் சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்தினை சாதகமாகப் பயன்படுத்தி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான விரைவான வேலைத்திட்டத்துக்கு பங்களிக்க முடியும் என்று இலங்கை வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் மூலம் நாட்டை வேகமாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வரும் முயற்சிகளை சங்கத்தின் புதிய அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மீள்பிறப்பாக்க வலுச்சக்தி, விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை, வர்த்தக சபையின் தேசிய கொள்கைகள் குழுக்கள் விசேட கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நடைமுறையில் உள்ள சில சட்ட திட்டங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் அதைரியமடைந்துள்ளனர். இதுபோன்ற தடைகளை நீக்குவதும் நவீன மயமாக்கல் மூலம் முறைகேடுகள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதன் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி கூறினார்.
அரசாங்கத்தின் பொறுப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இளைஞர் தலைமுறையினர் புதிய தொழில் முயற்சியாளர்களாகவும் வர்த்தகர்களாகவும் முன்வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.