பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது தேவையற்ற விடயம்: திலீபன் எம்.பி சுட்டிக்காட்டு
எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது தேவையற்ற விடயம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ நாம் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும் எனில் யார் சிறிலங்கா அதிபராக வரப் போகிறாரோ அல்லது அந்தப் போட்டியில் யார் முன்னிலையில் உள்ளாரோ அவருடன் தான் பேரம் பேச முடியும்.
சம்பந்தமில்லாதவருக்கு ஆதரவு அளிப்பது எமக்கு இழப்பு தான். அது ஆரோக்கியமானது அல்ல.
பொது வேட்பாளர்
ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), சஜித் (Sajith Premadasa) , அனுர (Anura Kumara Dissanayake) ஆகியோர் தான் இந்த போட்டியில் உள்ளனர். அவர்களுடன் பேசி அல்லது அதில் வெல்லக் கூடியவருடன் பேசித் தான் நாம் எமக்கானவற்றை பெற வேண்டும்.
அதை விடுத்து பொது வேட்பாளர் என்பது தேவையற்ற விடயம். பொது வேட்பாளர் என ஒருவரை நிறுத்துவது எமது மக்களையும், அவர்களது அபிவிருத்தியையும் இன்னும் பின்னுக்கு கொண்டும் செல்லும் செயற்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |