காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககேளின் போராட்டத்துக்கு தமிழ்த்தேசியப் பேரவை ஆதரவு
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான நேரடி சாட்சிகளாக இருந்த தாய்மார்கள் மற்றும் வயோதிப பெற்றோர்கள் வயது முதிர்வு மற்றும் இயற்கை மரணம் காரணமாக ஒவ்வொருவராக உயிரிழந்து வருவதாக சுகாஸ் சுட்டிக்காட்டினார்.
ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம்
அதோடு காலம் மேலும் கடந்து செல்லும் நிலையில், முக்கியமான சாட்சியங்களும் ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சர்வதேச விசாரணைக்கான வாய்ப்பு உருவானாலும் சாட்சியங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால் நீதியைப் பெற்றுக்கொள்வது கடினமாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

''காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்காகவோ தனிப்பட்ட நலன்களுக்காகவோ காணாமல் ஆக்கப்படவில்லை. அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான போராட்டத்தின் பின்னணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
எனவே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை தனிப்பட்ட குடும்பங்களின் பிரச்சினையாக மாத்திரம் கருதாமல், ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டமாக அணுக வேண்டும்.
தமிழ் மக்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல் தரப்புகள் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்." எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார் .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening