மாணவன் வன்புணர்வு - தேரருக்கு 17 வருட கடூழிய சிறை
பதின்ம வயது பாடசாலை மாணவனை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட தேரருக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிதா, இந்த தீர்ப்பை அளித்தார்.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பன்விலதன்ன பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல்
இவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், முதல் குற்றத்திற்காக அவருக்கு 07 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 10000 ரூபா அபராதமும் விதித்து உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். உரிய தொகையை செலுத்தாவிட்டால் மேலும் 06 மாத கால சிறைத்தண்டனையை இலகுவான வேலையுடன் அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
17 வருட கடூழிய சிறை
இரண்டாவது குற்றத்திற்காக, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.15000 அபராதமும் விதித்தார். முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு 07 மற்றும் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனுக்கு 250,000 ரூபாவை வழங்குமாறு குற்றம் சுமத்தப்பட்டவருக்கு உத்தரவிட்டார்.
இத்தொகையை செலுத்தாவிட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
ஹஷான் ஹேமரத்ன களனி ஷில்லதாசி தேரர் அல்லது ஹந்துவல தேவகே என்ற நபருக்கே அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.