தரமற்ற மருந்துகள் இறக்குமதி : விரைந்து செயற்பட்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள்
போலி ஆவணங்களைத் தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்கும், அதற்கு அனுமதி வழங்கிய அரச உயர் அதிகாரிகள் இருவருக்கும் வெளிநாடு செல்வதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த மனுவினை அடிப்படையாகக்கொண்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்தின் உரிமையாளரான 'அருண தீப்தி' என அழைக்கப்படும் சுகத் ஜானக பெர்னாண்டோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளரான விஜித் குணசேகர, சுகாதார அமைச்சின் விநியோக பணிப்பாளரான கபில விக்கிரமநாயக்க ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி 22,500 இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்துக் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குறித்த நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த மருந்து நிறுவனம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
சுமார் 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மோசடியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாளிகாகந்த நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர்களுக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதுமாத்திரமல்லாமல் சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.