தற்கொலை அங்கி மீட்பு- ஸ்ரீலங்காவின் முக்கிய நபரை கொலை செய்யும் நோக்கம்? சி.ஐ.டி தகவல்!
வவுனியாவிலுள்ள வனப் பகுதியொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்புத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஸ்ரீலங்காவிலுள்ள முக்கிய நபர் ஒருவரை கொலை செய்வதற்காகவோ இந்த தற்கொலை அங்கி தயார்ப்படுத்தப்பட்டிருந்தது என்ற கோணத்தில் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கை பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவரினால் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியா – நெடுங்கேணி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையான வெடிப் பொருட்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் சகோதரர், 2006ம் ஆண்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரினால் அகற்றப்படும் கண்ணிவெடிகளிலுள்ள இரும்புகளை மட்டக்களப்பிலுள்ள இரும்பு கொள்வனவு செய்யும் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காகவும், அதிலுள்ள வெடி மருந்துகளை வேறொரு தரப்பிற்கு விற்பனை செய்வதற்காகவும் அவர் இந்த வெடி மருந்துகளை சேகரித்து வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மட்டக்களப்பு இரும்பு கொள்வனவு செய்யும் நபரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே, இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை உழைக்கும் நோக்குடனேயே, இந்த சந்தேக நபர் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கும், பயங்கரவாத அமைப்புக்களுக்கும் தொடர்புள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.