22வது அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம் : மகாநாயக்கர்களை வைத்து சுஜீவ பகிரங்கப்படுத்திய அறிக்கை
மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க வெளியிட்டுள்ளார்.
இன்று (12.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்தக் கடிதத்தின் மூலம் குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் கூறி இருந்தார்.
ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் “இந்தக் கடிதத்தைக் தேடிக் கண்டுபிடிக்கக் கூட முடியாமல் இருந்தது.

எப்படியோ இந்தக் கடிதம் எனக்குக் கிடைத்தது.
நாடு எங்கு செல்கிறது என்பதை மகாநாயக்க தேரர்களே புரிந்து கொண்டுள்ளார்கள்.
தற்போதைய நிலையில், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது முறையே 63 மற்றும் 65 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வயது எல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது பொருத்தமானதல்ல என்பதே எமது நிலைப்பாடாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |