ஆயுதப் போராட்டத்திற்கு மூல காரணம் முடிவுக்கு வரவில்லை - தீர்வுகாண வழி கூறும் சுமந்திரன்
புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அதில் பிரதானமாக தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
ஆயுதப் போராட்டத்திற்கு மூல காரணமாக அமைந்த அரசியல் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஆகவே புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதன் மூலமாகவே அதனை நிவர்த்தி செய்ய முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு உருவாக்கம் என்றால் என்ன? எவ்வாறு? யாருக்காக என்ற தொனிப்பொருளில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நடத்திய இணையவழி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“ஒவ்வொரு அரசாங்கமும் பதவிக்கு வருகின்ற போது, மிக முக்கியமாக அரசியல் அமைப்பு திருத்தங்களை செய்வதாக வாக்குறுதியளித்தே ஆட்சிக்கு வந்துள்ளனர். 1994 ஆம் ஆண்டில் இருந்து இதனை அவதானிக்க முடிகின்றது.
நிறைவேற்று அரச தலைவர் முறைமையை முழுமையாக ஒழிப்பது என்ற வாக்குறுதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதும் 28 ஆண்டுகள் கடந்தும் கூட மாற்றமொன்றை அவதானிக்க முடியவில்லை.
புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென 2015 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையொன்று பெறப்பட்டது. அதற்கு இணக்கம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
அதனை தயாரிக்க நாடாளுமன்றமே அரசியல் அமைப்பு பேரவையாக நிறுவப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அது முழுமைப்படுத்தப்படவில்லை” என்றார்.