சுமந்திரனின் கபடத்தனமான அரசியல்! கடுமையாக சாடிய ஆளும் தரப்பு எம்.பி
வலி வடக்கு மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில் அத்தனை விடயங்களையும் அறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களை கொழும்பில் போராட அழைப்பது கபடத்தனமான அரசியல் செயற்பாடாகும் என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில். நேற்று இடம்பெற்ற காணாமல் போனோர் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்காக செயற்பட்டு கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம்.
அரசாங்கத்தை குழப்பும் முயற்சி
இந்த அரசாங்கத்தை குழப்புவதற்கு மக்களை தவறான திசையில் திருப்பி தமது அரசியல் நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கு சிலர் முனைகின்றார்கள்.

அண்மையில் வலிவடக்கு மக்களுடைய போராட்டத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சில கருத்துக்களை முன்வைத்ததாக அறிகிறேன்.
அதாவது வலி. வடக்கில் நிலத்துக்காக போராடும் மக்களை அழைத்துக் கொண்டு கொழும்பு ஜனாதிபதி செயலகம் முன் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காகன அழைப்பை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கடந்த வாரம் வலி. வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய நிலையில் அதை அறிந்த சுமந்திரன் கொழும்பில் மக்களை போராட அழைத்திருக்கிறார்.
இந்த விடயம் தமது சுயலாப அரசியலுக்காக மேற்கொள்ளும் ஒரு விடயமாக பார்க்கின்ற நிலையில் தமது போராட்டம் மூலமே ஜனாதிபதி காணியை விடுவித்தார் என்ற வங்கு ரோத்து அரசியலை மேற்கொள்வதே இவர்களுடைய நிலைப்பாடு.
யார் போராடினாலும் போராடாமல் விட்டாலும் ஜனாதிபதி மற்றும் எமது அரசாங்கம் மக்களுடைய காணிகளை மக்களுக்கு என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் எமது வேலை திட்டங்களை மேற்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |