உச்ச நீதிமன்றில் சுமந்திரன் முன்வைத்த வாதம் : சிக்குவார்களா இரண்டு அமைச்சர்கள்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கட்சி மாறுவதற்கான சட்டபூர்வ தகுதி கிடையாது எனவும், இவ்வாறான செயற்பாடுகளை ஆதரிப்பதன் மூலம் நாடாளுமன்ற முறைமையை பேணுவதில் சவால் விடுக்க முடியும் எனவும் அதிபர் சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இன்று (12) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை இழக்கும் தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதிபர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணை நடைபெற்றது.
கட்சி உறுப்புரிமை இழப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஆளும் கட்சியில் இணைந்ததன் மூலம் கட்சி உறுப்புரிமையை இழந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்ற மரபுப்படி, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என தெளிவான பிரிவு இருக்க வேண்டும், அந்த பிரிவை மீறி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சியில் இணைந்தால் அவர் கட்சி உறுப்புரிமையை இழப்பதை தவிர்க்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனத் தெரிவித்த அதிபர் சட்டத்தரணி சுமந்திரன், தற்போதைய நாடாளுமன்ற முறையைப் பேண முடியாத நிலை உருவாகும் என எச்சரித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து!
ஒழுக்காற்று விசாரணை அவசியமில்லை
கட்சியொன்றில் இருந்து நீக்கப்படும் தீர்மானத்தின் பின்னர் அதுவே இறுதித் தீர்மானமாக அமையும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
தேர்தலில் கட்சிக்கு பொதுமக்கள் வாக்களித்த நிலையில் அதன்மூலம் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மற்றும் மக்களின் நோக்கங்களுக்கு எதிராக செயற்பட முடியாது என அதிபர் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது
இதன்படி மனுதாரர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கட்சி உறுப்புரிமையை இழந்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் கட்சியில் இருந்து அவர்களது உறுப்புரிமைய நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது எனவும் அவர்களின் மனுக்களை நிராகரிக்குமாறும் அதிபர் சட்டத்தரணி சுமந்திரன் மேலும் நீதிமன்றில் கோரியுள்ளார்.
மனு மீதான அடுத்தகட்ட விசாரணை, வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |