நாடு கடத்தப்பட்ட சமித்புர சத்துவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை : சிக்கிய மற்றுமொரு துப்பாக்கி
ஓமானில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமித்புர சத்து என்ற திமுத்து சதுரங்க தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ளார்.
இந்தநிலையில் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (21) வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணை
28 வயதுடைய சந்தேகநபரான சமித்புர சத்து இலங்கையிலிருந்து தப்பியோடி ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

அதன் பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |