ரணிலுக்கு ஆதரவளிக்க இதுதான் காரணம்: மிலான் ஜயதிலக்க புகழாரம்
இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்போம் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க (Milan Jayathilaka) தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள மக்களின் உள்ளுணர்வை புரிந்து கொண்ட தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதன் காரணமாகவே நாம் அந்த முடிவை எடுத்தோம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றிணைந்து வெல்வோம் என்ற தொனிப்பொருளில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானம்
குறித்த சந்திப்பானது, பம்பலப்பிட்டி லொரிஸ் மாவத்தையில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் ஊடக மையத்தில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது, இந்த நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகளைத் தீர்த்து,
இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரேயொரு தலைவராக ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவையே பார்க்க முடியும்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் குழு என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று நாங்கள் கலந்துரையாடினோம்.
இளம் அரசியல்வாதிகளாகிய நாங்கள் நாட்டைப் பற்றி சிந்தித்து இந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
இந்த நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியபோது அனைத்து தலைவர்களும் ஓடிவிட்டனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.
அவர் சவாலை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, குறுகிய காலத்தில் இந்த நாட்டை மீட்டெடுத்தார். எதிர்காலத்தில் இந்த நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் மக்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலை, சமூகம் ஆகிய சூழலை உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தலைவராகவே நாம் அவரைப் பார்க்கின்றோம்” எனறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |