சுரக்சா காப்புறுதித் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்சா காப்புறுதித் திட்டம் 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்லவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
முன்னர் சுரக்சா காப்புறுதித் திட்டத்தின் காலக்கெடு 2027ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதி அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சு, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்
அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை படிக்கும் 5 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் உதவி பெறும் விசேட பாடசாலைகளில் படிக்கும் 4 முதல் 21 வயது வரையிலான 40 இலட்சம் மாணவர்களுக்கு சுரக்சா மாணவர் காப்புறுதித் திட்டத்தை கல்வி அமைச்சு மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகியவை இணைந்து செயற்படுத்துகின்றன.

அதன்படி, அந்த மாணவர்களுக்கு சுகாதார காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |