சுரேஷ் சலேவின் தாயாரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்....!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் (Suresh Sallay) தாயார், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயகவுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என கோரி அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதம் நேற்று (23-08-2026) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம்
அவரின் கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது மகன் 37 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி தனது இளமைக்காலத்தையும் குடும்பத்துடன் செலவழித்திருக்க வேண்டிய பொன்னான நேரத்தையும் நாட்டிற்காகத் தியாகம் செய்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகன் மீதான விசாரணைகளை நிறுத்துமாறு தான் கேட்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், என் மகன் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், அதிகாரிகள் அவற்றை விசாரித்து கிடைக்கப்பெறும் ஆதாரங்களை ஆய்வு செய்து உண்மையைக் கண்டறியட்டும் அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என்றும், ஆதாரங்களைத் திரட்டுவதற்குப் பதிலாகத் தடுப்புக் காவலை ஒரு மாற்றாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது மகனின் தடுப்புக் காவலை மேலும் நீட்டிக்காமல், அவர் சட்டத்தை சுதந்திரமாக எதிர்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், நியாயமான முறையில் விசாரணையை எதிர்கொள்ள அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அநுர குமார திஸாநாயகவைச் நேரடியாகச் சந்திக்க வாய்ப்பளிக்குமாறு கோரியுள்ள அவர், தான் எந்தவித சிறப்புச் சலுகையையும் எதிர்பார்க்கவில்லை என்றும் நீதி, மனிதநேயம் மற்றும் நியாயமான வாய்ப்பை மட்டுமே கோருவதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |