ராஜபக்ச அரசாங்கத்திற்குள் பிரிவினையா? சுசில் பிரேமஜயந்த வெளியிட்ட தகவல்
கோட்டாபய - மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குள் எந்தவொரு பிரிவினையும் ஏற்படவில்லை என ஆளும் பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளை வைத்து அரசாங்கம் அதிர்வை சந்தித்திருப்பதாக தெரிவிப்பது பிழையான கருத்து என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்கட்சி பொதுஜன முன்னணிக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையே சில புரிந்துணர்வுக்கு வந்தது. அதிலுள்ள விடயங்கள் சில இன்று அமுல்படுத்தப்படவில்லை என்று தெரிவிப்பதால் பேச்சு நடத்தியிருக்கின்றனர்.
அரசாங்கத்திற்குள் எந்த அதிர்வலைகளும் ஏற்படவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் இருக்கின்றது.
எந்தவொரு அரசாங்கத்திலும் இப்படி சில பிரச்சினை உள்ளது. எந்தப் பிரச்சினை இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து தான் அரசாங்கத்தை அமைத்தார்கள்.
கொவிட் தொற்று நெருக்கடியை ஒழிப்பது தான் பிரதான பிரச்சினையாகும். அதற்கே அனைவரும் முன்னுரிமையளிக்க வேண்டும் என்றார்.