ஹட்டனில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலர் அதிரடியாக கைது
ஹட்டன் தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்டத்தில் மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போயா தினமான இன்று 07.09.2025 சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை குறித்த தோட்டத்திலுள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
புதைத்து வைக்கப்பட்ட மதுபான போத்தல்கள்
போயா தினத்தன்று உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், சந்தேக நபர் அதிக விலைக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதுபான போத்தல்களை வாங்கி கொண்டு வந்து தனது தோட்டத்தில் புதைத்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என ஹட்டன் தலைமையக காவல்துறையின் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை அனுமதிப்பத்திரம் இல்லாமல் 3,500 கிலோகிராம் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியை ஹட்டன் காவல்துறையினர் இரண்டு சந்தேக நபர்களுடன் இன்று (07) கைது செய்துள்ளனர்.
கழிவு தேயிலை
கம்பளை, வெலம்பொடவிலிருந்து தலவாக்கலைக்கு கழிவு தேயிலை கொண்டு செல்லப்படுவதாக ஹட்டன் காவல்துறையின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில குறித்த லொறியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
கழிவு தேயிலையை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் அந்த லொறிக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பின்னர், சாரதி மற்றும் உதவியாளர் குறித்த லொறியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கழிவு தேயிலை மற்றும் சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று சோதனை நடத்திய ஹட்டன் காவல்துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
