சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்; 28 பேர் பலி
சிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 28 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் டீர் அல்ஷோர் மாகாணத்தில் இராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈராக் எல்லையை ஒட்டி உள்ள நெடுஞ்சாலையில் நடந்த இத் தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்ததாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பண்டைய நகரமான பல்மைராவுக்கு அருகில், பெரும்பாலும் சிரியா இராணுவமும் ஈரானிய ஆதரவு போராளிகளும் தங்கியிருக்கும் பகுதியில் இத் தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இராணுவ வீரர்கள் மற்றும் அரசாங்க ஆதரவு போராளிகள் விடுப்பு முடித்துவிட்டு, தங்கள் தளத்திற்கு திரும்பி சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
மேலும் பாலைவன பிராந்தியத்தில் குகைகளில் மறைந்திருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள், கடந்த சில மாதங்களாக பதுங்கியிருந்து நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சிரிய உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.