தமிழர்கள் வாழவே தகுதியற்றவர்கள் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் போக்கு - புலம்பெயர் தமிழரிடமே கையேந்தும் நிலை!
புலம்பெயர் உறவுகளின் உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் பெற விரும்பினால் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முன்வைக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை இன்று முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும் அந்த உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்கியுள்ளது.
தமிழர் புலம்பெயர்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டமே காரணம்
இலங்கையிலிருந்து மில்லியன் கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்கான காரணமாக இருந்த பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை.
ஆனால் அரசாங்கம் தனக்கு தேவையான நேரங்களில் சில தற்காலிக ஏற்பாடுகளினூடாக புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற முயற்சிக்கிறது.
ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழர்களும் இதனை சரியாக புரிந்துள்ளனர் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ளவேண்டும்.
வடக்கு கிழக்கு ஊடாகவே அரசாங்கத்திற்கு புலம்பெயர்ந்தோரின் உதவி
பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் இலங்கையை மீட்டெடுக்க புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்குமாயின், அந்த ஒத்துழைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஊடாக மாத்திரமே முடியும்.
தமிழர்கள் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்ற போக்கிலேயே சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறதெனவும் இந்த போக்கை மாற்றுவதற்கு சர்வதேச சமூகம் தன்னாலான அனைத்தையும் செய்ய முன்வர வேண்டும்” எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.