தாயகத்தை காதல் செய்த வீரர்கள் வாழ்ந்த மண்ணிது…!
Courtesy: தீபச்செல்வன்
இலக்கியத்தில் அகமும் புறமும் என்ற இரு துறைகள் தனித்தனியாகப் பாடப்படுவன. சங்க இலக்கிய மரபில் அகத்திணைப் பாடல்களும் புறத்திணைப் பாடல்களும் காதலையும் வீரத்தையும் விதந்து பாடுகின்றன.
தமிழ் நிலம் பார்த்த இந்த இலக்கிய மரபு, நவீன ஈழத்தில் புதியதொரு பாடுபொருளாக ஆகியிருக்கிறது.
அது என்றைக்கும் இளைய சமூகத்திற்கு தனித்துவமான பாதையையும் வாழ்நெறியையும் காட்டுவதாக அமைவது தான் ஈழ நிலத்தின் தனித்துவ மரபு.
உயிரிலும் மேலாய் தாயகத்தை காதல் செய்தவர்களின் தலைமுறையின் கனவாலும் குருதியாலும் நனைந்த நிலத்தில் இருக்கும் அனுபவங்களும் பாடங்களும் என்றும் எமக்கான பாதையை செப்பனிட்டு நிற்கின்றன.
இளைஞர்களின் வழி
எந்தவொரு சமூகத்திலும் இளைஞர்களும் யுவதிகளும் தான் தமது இயங்கு நிலையால் பெரு அடையாளத்தை உருவாக்குகின்றனர்.
காலத்தின் முகமாகவும் எதிர்காலத்தின் நம்பிக்கையாகவும் இளைஞர்கள், யுவதிகள் தான் முன்னிலை பெறுகின்றனர். இளைஞர்கள் உருவாக்கும் பாதை ஒரு சமூகத்தின் பாதையாக மாறிவிடுகிறது.
அதற்கு உலகில் பல உதாரணங்கள் இருக்கின்றன. ஈழமும் அதற்குப் பெரு உதாரணமாய் இருக்கிறது. அந்த வகையில் அவர்கள் எதைப் படிக்கிறார்கள்? எதை முன்னூதாரணமாகக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்தப் பாதை அமைகிறது.
இளைஞர்களின் வழியென்பது ஒரு சமூகம் நகரும் வழியாகும். இளைஞர் சமுதாயம் சீரழிந்தால் அதுவே ஒரு சமூகத்தின் வீழ்ச்சியாக மாறிவிடுகிறது.
கல்வி, ஒழுக்கம், வாசிப்பு, சிந்தனை, செயற்பாடு, ஊக்கத்திறன், அவதானிப்பு என்று பல நிலைகளிலும் இளைஞர்கள் விழிப்புப் பெற தயங்குகின்ற போது அது சமூகத்தில் பெரும் தளர்வையும் சிதைவையும் உருவாக்கிச் செல்கிறது.
இதற்கு இளைஞர்கள் மாத்திரமே பொறுப்பா என்பதைக் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். அதற்கு முழுச் சமூகமும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இளைஞர், யுவதிகள் என்ற வளத்தை சூழ்ந்திருக்கும் சமூகமே அதற்குப் பொறுப்பாகும்.
யாழ்ப்பாண இளைஞர்களின் தவறா?
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது. இதன் போது யாழ் இளைஞர்கள் நடந்த விதம் குறித்து பல்வேறு கருத்துநிலைகள் எழுந்துள்ளன.
என்றபோதும் கூட குறித்த இசைநிகழ்ச்சியும் அதனை ஏற்பாடு செய்தவர்களின் பேச்சும் உருவாக்கிவிட்ட சூழலையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்திற்கு வர மறுத்த தென்னிந்திய திரைக் கலைஞர்களை பெரும் வற்புறுத்தலில் அழைத்து வந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் கண்டன உரையாடல்களை திறந்து விட்டிருந்தது.
ஈழத் தமிழ் மக்கள் இன்றிருக்கும் நிலையில், இப்படியான வலிந்தளிப்பு எமக்குத் தேவைதானா? இந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சர்ச்சையான பேச்சுக்கள் மாத்திரமின்றி, போதாமை கொண்ட நிகழ்ச்சி ஏற்பாடுகளும் இசை நிகழ்ச்சி சிக்கலாவதற்கு அடிப்படையாய் அமைந்துவிட்டன.
ஒரு சில இளைஞர்கள் நிகழ்வின்போது நடந்து கொண்டமைக்காக ஒட்டுமொத்த யாழ்ப்பாண இளைஞர்களையோ, மக்களையோ பொத்தம் பொதுவாகப் பேசுவது என்பது தவறானது.
அதேவேளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நட்சத்திரங்களும் ஏற்பாட்டாளர்களும் பேசிய சர்ச்சைக் கருத்துக்கள் தான் இத்தகைய நிகழ்வுக்கு காரணம் என்று வாதிடுகிறவர்களும் உண்டு.
யாழ் இளைஞர்களை குறைத்து மதிப்பிட்டமைதான் நிகழ்வு இடைநடுவில் நிற்கக் காரணம் என்று இந்திய சமூக வலைத்தளங்கள் கூறுகின்றன.
போர்க்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்
ஈழத்தில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் தேவையில்லை என்ற கருத்து ஒருபோதும் ஏற்புடையதல்ல. ஆனால் எத்தகைய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன என்பதே இங்கு முக்கியமானது.
ஈழத்தில் போர் நடந்த காலத்தில் தென்னிந்திய திரைப்படங்கள் குறிப்பிட்ட தணிக்கை செய்யப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளன. சினிமா மினித் திரையரங்குகளும் ஈழத்தின் போர்க்காலத்தில் செயற்பட்டே வந்துள்ளன.
சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லும் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுடன் பன்னாட்டு திரைப்படங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு ஈழத்தில் திரையிடப்பட்டுள்ளன.
மக்கள் போர் அவலத்தின் போதும் இத்தகைய பொழுதுபோக்கை களித்துள்ளனர். அத்துடன் தென்னிந்திய திரைநட்சத்திரங்கள்கூட போர்க்கால ஓய்வுப் பொழுதுகளில் தாயகம் வந்துள்ளனர்.
பிரபல பாடகர் ரி.எல். மகாராஜன் அவர்கள் போர் ஓயந்திருந்த தருணம் ஒன்றில் வந்து கிளிநொச்சியில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடியிருந்தார்.
அத்துடன் பாடகி கல்பனா போன்றவர்கள் கிளிநொச்சிக்கு வந்தே புரட்சிப் பாடல்களைப் பாடிச் சென்றிருந்தனர். யாழ் இசை நிகழ்ச்சிக்கு வந்த ஹரிகரன் என்ற இசையாளுமை ஈழத்தின் புரட்சிப் பாடலை பாடியிருக்கிறார்.
அதேபோல உண்ணிகிருஷ்ணன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்திரா போன்றவர்களும் பிற்காலத்தில் பாடல்களைப் பாடியுள்ளார்கள். ஈழ விடுதலையின் ஆரம்ப காலத்திலும் பெரு நட்சத்திரப் பட்டாளம் ஈழப் புரட்சிப் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்.
போர் கால எழுச்சி நிகழ்வுகள்
அன்றும் தென்னிந்திய நட்சத்திரங்கள் ஈழத்தைப் பாடியுள்ளனர், ஈழத்தில் பாடியுள்ளனர். இன்றும் அவர்கள் வருகை தருகிறார்கள். ஆனால் இந்த இரண்டு முறைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
அண்மையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஈழம் வந்து இசை கச்சேரி ஒன்றை நடாத்தியிருந்தார். இதன்போது அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் இந்தியப் படையினரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபியில் சென்று அஞ்சலி செலுத்தினார். அத்துடன் ஈழக் கலைஞர்களுக்கு தனது நிகழ்ச்சியில் வாய்ப்புக்களை வழங்கினார்.
அங்குதான் அவர் வேறுபட்டு தனித்துவமாக நிற்கிறார். போர்க்காலத்திலும் அவர் ஈழத் திரைத்துறைக்கு முக்கிய பங்களிப்பை செய்தும் உள்ளார்.
அதேபோன்று ஈழத்தில் போர்க்காலத்தில் இசை நிகழ்ச்சிகள் பலவும் இடம்பெற்றுள்ளன. மக்கள் இடம்பெயர்ந்து இருக்கும் சூழலில் பல விதமான பொழுதுபோக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதற்காகவே புலிகள் இயக்கம் பல கட்டமைப்புக்களை உருவாக்கி இருந்தது. குறிப்பாக அக்காலத்தில் ஈழப் பாடகர்களான சாந்தன், சுகுமார், பார்வதி சிவபாதம் போன்றவர்கள் கலந்துகொண்டு பெருமளவு தாயகப் பாடல்களை பாடியதுடன் நல்ல கருத்துக்கள் கொண்ட தென்னிந்தியத் திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளனனர்.
எனவே எல்லாக் காலத்திலும் இத்தகைய பொழுது போக்கு நிகழ்வுகள் நடப்பதுண்டு. ஆனால் அவை எப்படி நடக்கின்றன என்பதே இங்கு முக்கியமானது.
தாயகத்தை காதல் செய்வீர்
நாம் வாழ்ந்த காலத்தில் தாயகத்தை காதல் செய்த தலைமுறைகள் வாழ்ந்தன. அதனால்தான் அவர்கள் மிகச் சிறந்த கண்ணியத்தை எம் மத்தியில் விதைத்தனர்.
உன்னதமான போராளிகள் எமது நிலத்தில் நிகரற்ற வீரர்களாக வாழ்ந்தார்கள். அவர்களை விடவும் கதாநாயகர்களை நாம் கண்டதில்லை. எந்தத் திரையிலும் காணாத நிஜ கதாநாயகர்கள் அவர்கள்.
அவர்கள் மண்ணையும் மக்களையும் நேசித்தார்கள். தம் துணையையும் தம் காதலையும் கூட தாயகத்திற்கு நிகராக விடுதலைக்கு நிகராக நேசித்தமை தான் அவர்களின் வாழ்வொழுக்கம். அதுவே அவர்களின் வாழ்நெறி.
அதனால் தான் அவர்கள் இந்த உலகம் திரும்பிப் பார்க்கும் சாதனை வீரர்களாக எம் சரித்திரத்தை நிறைத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய பாடங்களை எம் இளைய தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுக்காமல் திரையிலும் சீரழிவிலும் உதாரணங்களை தேட வழிவிட முயல்வதனால் தான் இளைய சமூகம் சிதைவுக்கு உள்ளாக நேரிடுகிறது.
அவர்களைப் பற்றிக் கற்றுக் கொடுப்பது போல சிறந்த கல்வி வேறொன்றும் இல்லை. 2009இற்குப் பிந்தைய அரசியல் சூழலால் அவர்களை குறித்து பிள்ளைகளுக்கு சொல்லத் தவறும் ஒவ்வொரு பொழுதிலும் சிதைவுகளை நாம் அறுவடை செய்ய நேரிடும்.
அப்படி சொல்லிக் கொடுக்க இயலாத அரசியல் சூழல் நம்மை சிறைப்படுத்தியதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் காலத்தையும் சூழலையும் அறிந்தே நாம் பாடங்களையும் பாதைகளையும் அமைத்து நம் தலைமுறையினரை வழிப்பட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 13 February, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.