தமிழர் இனப்படுகொலையின் நீடித்த அடையாளமே நினைவுச்சின்னம் : கனடா எம்.பி கருத்து
கனடாவின் (Canada) பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னமானது எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான, சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன் (Juanita Nathan) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சக்திவாய்ந்த இடம் தமிழர் இனப்படுகொலையின் நீடித்த அடையாளமாக திகழ்கின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”நேற்றைய தினம் அர்த்தபூர்வமானதாக அமைந்தது, தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை திறக்கும் நிகழ்வில் நான் எனது சமூகத்தவருடன் இணைந்துகொண்டேன்.
அனுபவித்த வேதனைகள்
கனடிய தமிழர் தேசிய அவைக்கும், பிரம்டன் தமிழ் சங்கத்திற்கும் மேயர் பட்ரிக் பிரவுனிற்கும் நகரத்தின் கவுன்சிலர்களிற்கும் இந்த நினைவுத்தூபியை சாத்தியமாக்கிய சமூக அமைப்புகளின் தலைவர்களிற்கும் நான் நன்றியுடையவளாக உள்ளேன்.
இந்த சக்திவாய்ந்த இடம் தமிழர் இனப்படுகொலையின் நீடித்த அடையாளமாக திகழ்கின்றது, இழக்கப்பட்ட உயிர்கள், துண்டாடப்பட்ட சமூகங்கள் பலர் அனுபவித்த வேதனைகளிற்கான அடையாளமாக திகழ்கின்றது.
மேலும் இது தமிழ் சமூகத்தினர் மத்தியில் காணப்படும், வலிமை மீள் எழுச்சி தன்மை நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்தையும் பிரதிபலிக்கின்றது.
புலம்பெயர்ந்த தமிழர்கள்
மே மாதம் கனடா தமிழர்களிற்கு ஒரு வேதனையான குறிப்பிடத்தக்க மாதமாகும், உயிரிழந்தவர்களையும் தப்பியவர்களையும், அவர்கள் அனுபவித்தவற்றின் அதிர்ச்சிகளை தொடர்ந்து சுமந்துகொண்டிருப்பவர்களையும் நாம் நினைவுகூரும்போது, இந்த நினைவுச்சின்னம் அவர்களின் நினைவை போற்றுவதற்கும், வெறுப்பிற்கு எதிராக எழுந்து நின்று மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு பொறுப்பு குறித்து சிந்திப்பதற்குமான ஒரு இடத்தை வழங்குகின்றது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடு கனடா, அவர்களின் பங்களிப்பு கனடாவை எண்ணற்ற வழிகளில் வளப்படுத்தியுள்ளது.
இந்த நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை, நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது என்பதற்கான உண்மையான நினைவூட்டல்” என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
