புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
இன்று மே 10 உலக அன்னையர் தினம். இந்த நாளில் நமது வீட்டின் அன்னையர்களையம் நாட்டின் அன்னையர்களையும் நினைவில் கொள்வதும் அவர்களின் உணர்வையும் போராட்டத்தையும் பற்றி பேசுவது என்பது அவசியமான கடமையாகும்.
அன்னை என்றாலே அன்புதான். அன்னை இந்த உலகை படைத்தவள். அளின் பேரன்பினால் இழையோடிய இந்த உலகு அத்தனை அழகானது. அன்னையின் சொல் மந்திரம். அன்னையின் கனவு உன்னதம்.
அன்னையின் பேரன்புக்கு ஈடாக உலகின் எந்த மலர் கொத்தை அவளுக்கு பரிசளிக்க முடியும்? உண்மையில் அவளுக்கு உகந்த பிள்ளையாக வாழ்வதே அவளுக்கு அளிக்கும் பெரும் பரிசு ஆகும்.
அன்னையரின் கண்ணீர்
ஈழத்தில் பிள்ளைகளை போரில் பறிகொடுத்த அன்னையர்களின் புத்திரசோகம் மிகவும் கொடியதே. காணாமல் ஆக்கப்பட்ட பிள்கைளின் தாய்மாரின் காத்திருப்பு மிகவும் கொடியேதே. உண்மையில் அன்னையர்கள் கண்ணீர் சிந்துதல் என்பது ஒரு நாட்டின் அரசியலும் மனித உரிமையும் மிகவும் கீழான நிலையில் இருக்கிறது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல காண்பிக்கின்ற நிதர்சனமாகும்.
சிந்தும் அன்னையர்கள் பலரை பார்த்துவிட்டேன். அன்னையர்தினமான, இன்றைய நாளில் அந்த அன்னையர்கள்தான் கண்ணின் முன்னால் வருகின்றனர்.
மனத்திரையில் வந்து காணாமல் போன பிள்ளைகளின் படங்களை ஏந்தியபடி அழுகின்றனர். அதற்காக சில அன்னையர்களின் கதைகளை இங்கு பகிர்வது பொருத்தமானது. ஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்சியை தனக்குள் உருவாக்கியிருப்பவர்.
ஏன் அழ வேண்டும்? என்பதுதான் அவரது கேள்வி. இலங்கை அரசு உத்தரவாதமளித்து இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை திருப்பித் தரவேண்டியது அரசின் கடமை.எனவே இலங்கை அரசு எனது பிள்ளையை திருப்பித் தரவேண்டும் என்கிறார் அந்தத் தாய். அவளின் காத்திருப்பே தாய்மையின் உன்னதமாகும்.
கையளிக்கப்பட்ட பிள்ளை
காணாமல் போன பிள்ளை என்று அடையாளப்படுத்த விரும்பாத செல்லம்மா எனது பிள்ளையை காணாமல் போன பிள்ளை என்று இலங்கை அரசு சொல்ல முடியாது என்கிறார். கையளிக்கப்பட்ட பிள்ளை காணாமல் போவது எப்படி என்று அவர் கேட்கும் கேள்விக்கு பதினாறு ஆண்டுகள் அண்மிக்கின்ற நிலையிலும் இலங்கை அரசு பதில் அளிக்கவில்லை.
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் வீடுகளில் அந்தப் பிள்ளைகள் குறித்து அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். எந்தக் கணத்திலும் அவர்கள் நினைவுதான்.
எந்தக் கணத்திலும் அவர்கள் வருகிறார்களா? என்ற எதிர்பார்ப்புத்தான் எஞ்சியிருக்கும். போரின் இறுதியில் சரணடையவப் போவதாக சொல்லி தனது உடைகளை தாயாரிடம் கையளித்துவிட்டுச் சென்றான் கோபிநாத். அவன் எனது பள்ளிக்கால நண்பன். எனது பிள்ளை எங்கு சென்றான்? எப்போது வருவான் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டே வாழ்கிறார் அவனது தாயார் வாசுகி.
படலை திறக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் என் பிள்ளை வருகிறார் என்றே என் மனம் நினைக்கும் என்று சொல்கிறார் வாசுகி. நாளும் பொழுதும் கண்ணீரோடு காலத்தை கழிக்கும் இந்த தாயின் கண்ணீருக்கு யார் பொறுப்பு?
அன்னையரை அரசியலுக்குப் பயன்படுத்திய ஜேவிபி
ஜேவிபி அரசு கடந்த காலத்தில் இந்த அன்னையர்களை வைத்து போராட்டங்களை நடாத்தி வடக்கு கிழக்கில் அரசியல் செய்ய முற்பட்டது. இன்று ராஜபக்சவின் பாசையில் பேசும் இந்த அரசும் தமிழ் ஈழ அன்னையர்களின் கண்ணீரை துடைக்க முன்வரவில்லையே?
அகாலத்தில் பறிக்கப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து இந்த அரசு என்ன சொல்லப் போகிறது? யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சேர்ந்த ஜெயகலா கைது செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட தன் பிள்ளையின் புகைப்படத்தை ஏந்தியபடி கண்ணீர் சிந்துகிறார்.
கைது செய்யப்பட்ட மகன் பூசா சிறைச்சாலையில் உயிருடன் இருக்கும் புகைப்படத்தை சாட்சியமாக்கி இந்த தாய் போராடுகிறாள்... இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த தனது பிள்ளை எங்கே? என்று கேள்வி எழுப்பும் இந்த அன்னைக்கு இலங்கை அரசு பதில் அளிக்க வேண்டும்.
இப்படி எத்தனை பிள்ளைகளுக்காக எத்தனை அன்னையர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்? இந்த நாள் அன்னையர்களின் கண்ணீரை துடைக்கும் செயலை தொடங்குவதுதான் அன்னையர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய மரியாதை. ஆட்சியாளர்களும் தலைவர்களும் இதற்கான மெய்யான நடவடிக்கைகளைத் தொடங்குவார்களா?
அன்னையே தேசத்தின் அடையாளம்
அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டின் அடையாளம் என்பது என்ன? மனித உரிமையற்ற, குற்றங்கள் நிறைந்த, நீதியற்ற, அநீதிகள் நிறைந்த ஒரு நாட்டில்தான் அன்னையர்கள் கண்ணீர் சிந்துவார்.
படுகொலை செய்யப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட ஒரு இனத்தின் அன்னையர்கள் கண்ணீர் சதாரணமானதல்ல. வலியது அக் கண்ணீர். ஈழ அன்னையர் கண்ணீர் சிந்துவதன் ஊடாக சொல்லப்படும் செய்தியை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்னையர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். அன்னையர் கண்ணீர் சிந்ததாக நாடு என்பது ஆகச் சிறந்த தேசத்தின் அடையாளம். அதுவே வெற்றி. அதுவே அழகு. அதனால்தான் பூமியைத் தாய் என்கிறோம்.
அதனால்தான் நாட்டைத் தாய் என்கிறோம். எம் அன்னையர்கள் கண்ணீர் சிந்தாத நாடாக ஈழம் என்று மாறும்? ஈழத்தின் அன்னையர்கள்போல உலகின் எந்த அன்னையர்களுக்கும் புத்திரசோகத்தின் பெருந்துயர் அண்டாதிருக்க வேண்டும் என்பதே இந்த நாளின் பிரார்த்தனை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 11 May, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
