ஜெய்சங்கரை சந்தித்த தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள்
இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, தமிழ் நாட்டின் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பாக்-வளைகுடா பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் தொடர்ந்து கைதுசெய்யப்படும் கடற்றொழிலாளர்கள் விடயத்தில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசின் ஆதரவைக் கோரி நேற்று (19) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதேவேளை தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா அரசுடன் பேச்சுவாரத்தை
பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த கடற்றொழிலாளர்களின் சங்கத் தலைவர் பி. ஜேசுராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, தற்போதைய நிலவரம் தொடர்பில் எடுத்துக்கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சிறிலங்கா கடற்படையினரால் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தமது கடற்றொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் பிரதிநிதிகள், ஜெய்சங்கரிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொடர்ந்தும் இடம்பெறும் கைதுகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, உறுதியளிக்கும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் சிறிலங்கா அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒரே தீர்வாகும் என்று கடற்றொழிலாளர்கள் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளனர்.
150இற்கும் மேற்பட்ட படகுகள்
இதேவேளை சிறிலங்கா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகுகளின் எண்ணிக்கை குறித்தும் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
2018 முதல், பறிமுதல் செய்யப்பட்ட 150இற்கும் மேற்பட்ட இழுவைப் படகுகள் திருப்பித் தரப்படவில்லை என்றும் ராமநாதபுரம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் இருந்தும் ஒரு குழுவினர் புதுடில்லியில் அமைச்சர்களை சந்தித்து கருத்துக்களை கூறியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் கடற்றொழிலாளர் தலைவர்களுடன் காவல்துறை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் அமைதிக் குழுக்கூட்டம் ஒன்றை நேற்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |