தமிழக மக்களின் உணர்வுகளை மதியுங்கள் -7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சட்டத்தரணி அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25ஆம் திகதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28ஆம் திகதிக்குள் ஆளுநர் தீர்மானித்திருக்க வேண்டும்.
ஆனால், கெடு முடிந்து 4 நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை, அதற்கான காரணத்தையும் ஆளுநர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும்.
7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும்.
பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார்.